பள்ளியின் வரலாறு

இ.எல்.எம்.பெப்ரிசியஸ் மேல்நிலைப்பள்ளி இப்பகுதி மக்களுக்கு சிறப்பான கல்வி சேவையை கடந்த 175 ஆண்டுகளாகச் செய்து வருகிறது.

Rev. C. F. கிரம்மர்
கி.பி 1849 ஆம் ஆண்டு Rev. C.F. கிரம்மர் அவர்கள் சென்னை தாணா தெருவில் ஒரு வாடகை வீட்டில் ஆரம்பப்பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். இப்பள்ளி 48 மாணவர்கள் 31 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் ( 2 ஆண் 1 பெண்) ஆரம்பிக்கப்பட்டது.
கி.பி. 1858 ஆம் ஆண்டில் தாணா தெருவில் லுத்தரன் அடைக்கலநாதர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வாலய வளாகத்தினுள் தெற்கு பகுதியில் அமைந்த தனிக் கட்டடத்திற்கு ஆரம்பப் பள்ளி மாற்றப்பட்டது. Rev.C.F. கிரம்மர் அவர்கள் ஆரம்ப பள்ளியின் மனேஜராக பணியாற்றினார்.

ஆங்கில வழியில் கல்வி பயன்றிடவும், தமிழ் வழியில் கல்வி பயின்றிடவும் வசதி செய்து கொடுத்திருந்தார்.

Rev.R.ஆண்ட்மென் (1866-1887)
Rev. C.F கிரம்மருக்குப் பின் சென்னையில் ஜெர்மன் மிஷனரியாக Rev. R. ஆண்ட்மென் பொறுப்பேற்றார்.(கி.பி 1866). கி.பி 1866 இல் இப்பள்ளியிலிருந்து பிரிக்கப்பட்டு பெண்கள் பள்ளி தனியாக இயங்கியது. Rev.R.ஆண்ட்மென் கி.பி 1882 இல் கல்வி இலாகாவின் ஒழுங்கு முறைகளை நிறைவு செய்து இப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினார். இப்பள்ளிக்கு லுத்தரன் மிஷன் நருநிலைப் பள்ளி எனப் பெயரிட்டார்.

Rev. L.காபிஸ் (Johannes kabis) கோஹன்னஸ் காபிஸ்

கி.பி1887ல் Rev. R. ஆண்ட்மென் ஓய்வு பெற்று தாயகம் திரும்பியதும், Rev.L காபிஸ் அவர்கள் சென்னையில் மிஷனரியாக நியமிக்கப்பட்டார்.

சென்னை வேப்பேரியில் கி.பி 1741 -1791 வரை ஜெர்மன் மிஷனரியாக பணியாற்றி மறைந்த Rev. பெப்ரிசியஸ் ( Johann Philip Fabricius) அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் படியாக லுத்தரன் மிஷன் நடுநிலைப்பள்ளிக்கு பெப்ரிசியஸ் பள்ளி என பெயரிட்டார்.

மாணவர்களுக்குப் போதுமான வகுப்பறைகள் இல்லை. ஆகவே பள்ளிக்கென அதிக இட வசதியுடன் கட்டடம் கட்ட விரும்பினார். புரசைவாக்கம் நெரடுஞ்சாலையில் விற்பனைக்கு வந்த ஒரு பெரிய வீட்டை வாங்க விலை பேசினார். இந்த சமயத்தில் (கி.பி.1892) நீண்ட
விடுமுறையில் தாயகம் சென்றார்.

Rev.நேதர்

Rev.L.காபிஸ்க்குப் பின் Rev.நேதர் அவர்கள் பொறுப்பேற்று, Rev.L காபிஸ்அவர்கள் விட்டு சென்ற பணியை தொடர்ந்தார். அவர் முக்கியமாக பெப்ரிஷியஸ் பள்ளிக்கென இடம் வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதன் பலனாக தற்போது பள்ளி இயங்கும் இடத்தை வாங்கினார். (இந்த இடம் மூன்று பழைய வீடுகளைக் கொண்டதாகும் இந்த இடத்தின் மொத்த பரப்பளவு 21,295 சதுர அடி ஆகும்.)

Rev. L. காபிஸ்

தாயகம் சென்றிருந்த Rev.L. காபிஸ் அவர்கள் 1893 ல் சென்னைக்கு வந்து பழையபடி பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக்கு கட்டடம் கட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.பள்ளி கட்டுவதற்கு உரிய வரைபடம் தயாரித்தார்‌. 21. 11. 1893 இல் ஜெர்மன் மிஷின் டைரக்டர் திரு.வான் சுவார்ட்ஸ் அவர்கள் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார். கத்தோலிக்க பொறியாளர் ஒருவர் இலவசமாக பணிபுரிந்து உதவினார். குறுகிய காலத்திற்குள்ளாக கட்டி முடித்து, 12. 7.1894 இல் திருநிலைப்படுத்தப்பட்டது.

சென்னை தானா தெருவில் அடைக்கலநாதர் ஆலய வளாகத்தில் இருந்த பெப்ரிசியஸ் பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாறும் நிகழ்ச்சி விழாவில் சென்னை நகரின் புகழ் பெற்ற பெரியோர்கள்,பெரும் வணிகர்கள்,ஜெர்மன் மிஷனரிகள், ஜெர்மன் மக்கள் மற்றும் ஜெர்மன் நாட்டு தூதர் திரு.ஜெரடெஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நாள் முழுவதும் இன்னிசை முழங்க ஒரு திருவிழா போல மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு சேருவதற்கு வேறு பள்ளிக்கு சென்று காத்திருக்க வேண்டி இருந்தது. இதனை உணர்ந்த நிர்வாகம் 1914 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பை தொடங்கினர்.

* அச்சமயத்தில் முதல் உலகப்போர் 1914 – 1918 இல் தொடங்கியதால் உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டது.

திரு எம் டி மாணிக்கம்

திரு எம் டி மாணிக்கம் M.A அவர்கள் (1923 – 1943) உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராகவும் பள்ளியின் நிர்வாக குழுவின் செயலாளராகவும் பணியாற்றினார். இவரின் சீரிய முயற்சியால் 1926 ஆம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டு 1930 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல். சி (SSLC) அரசுத் தேர்வுக்கு மாணவர்கள் அனுப்பப்பட்டனர்.

உயர்நிலைப் பள்ளிக்குரிய தகுதியை பெற்று 1930 ஆம் ஆண்டு முதல் இ எல் எம் உயர்நிலைப் பள்ளியாக விளங்கியது.

திரு சி எஸ் ஜோனத்தான் M.A.,B.T., D.S.M தலைமை ஆசிரியர் அவர்களும், தாளாளர் திரு. Rev.A.J தேவராஜ் அவர்களும் இருந்த காலத்தில் இ.எல்.எம் பெப்ரீசியஸ் உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தி மேல்நிலை வகுப்புகள் 1978 – 1979 ஆம் கல்வி ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திரு K.S சுவாமிநாதன் B.A, L.T அவர்கள் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் அரசாங்க பொருளாதார உதவியுடன் 1970 ஆம் ஆண்டு விஞ்ஞானக் கூடம் திறக்கப்பட்டது.

திரு C.S ஜோனத்தான் M.A.,B.T., D.S.M அவர்கள் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்க உதவியுடன் சீகன்பால்க் கட்டிடத்தினைக் கட்டினார்.

திரு.சத்தியதாஸ் வேதநாயகம் தலைமை ஆசிரியர் அவர்களும் தாளாளர் திரு. டாக்டர். H விக்டர் கிறிஸ்துதாஸ் அவர்களும் சீரிய முயற்சி எடுத்துக்
கணினி மையத்தினை அமைத்தனர்.

தாளாளர்.திரு.G.அருள்ஞானப் பிரகாசம் அவர்களின் முயற்சியினால் சீகன் பால்க் கட்டிட இரண்டாம் மாடி கட்டப்பட்டது‌.

தாளாளர் திரு‌.A.மோசஸ் தம்பி பிள்ளை M A,MEd,EPM(London) அவர்களின் முயற்சியில் பள்ளிக்கு ஒரு அழகிய கலையரங்கம் மற்றும்
புதிதாக ஒரு படிகட்டும் கட்டப்பட்டு
Rev.L .கிரம்மர் அவர்களின் பெயரால் திருநிலைப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியால் கட்டி முடிக்கப்பட்டது.

1998 – 99 ஆம் ஆண்டு இம்மல்ஸ் கட்டிடம் ஜெர்மானிய தாய் சபையின் உதவியோடு புதுப்பிக்கப்பட்டு பள்ளியின் 150 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு
திருநிலைப்படுத்தப்பட்டது.